Friday, April 20, 2012

கடவுள் துணையின்றி ஞானம் இல்லை

ஆணவம், கன்மம், மாயை என்ற இந்த மூன்றும் மும்மலங்கள் என்று அழைக்கப்படுபவை. இதில் ஆணவம் அன்பது தேங்காயின் உள்ளே இருக்கும் ஓடு போன்றது. கன்மம் என்பது அந்த ஓட்டில் ஒட்டியிருக்கும் நார் போன்றது. வெளியே இருக்கும் மட்டை தான் மாயை. 

 இந்த உடல்.. இது ஒரு நாள் அழியக்கூடியது என்றாலும் நாம் இதை அழியாது நம்முடனே இருக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அதுபோல் நம்முடைய  உடைமைகள்.  உறவுகள் .. அவையும் ஒரு நாள் அழியக்கூடியவை.. இதுபோல் நாம் எதையெல்லாம் அழியாமல் இருக்கக் கூடியவைகள் .. உண்மையானவைகள்  என்று நம்பிக் கொண்டிருக்கின்றோமோ ..  அவையெல்லாம் உண்மையானவை என்று நம்மை நம்ப வைத்துக் கொண்டிருக்கும் ஒன்றே மாயை. நாம் முற்பிறவியில் செய்த, இப்பொழுது  செய்து கொண்டிருக்கின்ற அனைத்து செயல்களின் விளைவுகளே கன்மம். என்னதான் நல்ல அறிவு இருந்தாலும் நல்ல மகான்களின் தொடர்பு இருந்தாலும் நல்ல வினைகள் செய்த புண்ணியம் இருந்தாலும் நான், எனக்கு என்ற எண்ணம் நம்மை விட்டு போகாது. நான் இதை செய்வேன்.. நானே செய்கிறேன்... எனக்கு தெரியும் .. என்ற அகங்காரம் நம்மை விட்டுப் போகாது. எல்லாம் கடவுள் செயல் என்று நாக்கு சொன்னாலும் மனதிற்குள் நான் நன்றாக  இன்றைக்கு பேசினேன், நன்றாக கட்டுரை எழுதி இருக்கிறேன் என்றே  நினைப்பு ஓடும். இதுவே ஆணவம்.

ஆணவம், கன்மம், மாயை என்ற இந்த மூன்றும் இருக்கும் வரை ஆன்மா தன்னிலை விளக்கம் அடைய முடியாது. ஆன்மாவும் பரம்பொருளைப் போன்ற ஒன்று தானே.. பின் ஏன் ஆன்மாவால் தானே இந்த மலங்களில் இருந்து வெளியே வர முடியவில்லை? என்று நீங்கள் கேட்பது தெரிகின்றது. இதற்கு தான் திருமூலர் ஒரு நல்ல பதிலைத் தருகின்றார்.

பஞ்சு இருக்கின்றது.. சூரிய காந்த கல் இருக்கின்றது.. இரண்டையும் ஒன்றாக வைத்தால் பஞ்சில் நெருப்பு பற்றிக் கொள்வதில்லை. அதே சமயம் சூரியனை நோக்கி சூரிய காந்த கல்லை வைத்து அதன் கீழ் பஞ்சை வைத்தால் பற்றிக் கொள்கின்றது. அது போல் இறைவன் என்ற சூரியனை துணைகொண்டால்,  சூரிய காந்த கல் என்ற ஆன்மா,  மலம் என்ற பஞ்சை எரித்துவிடும்.  என்ன ஒரு அருமையான விளக்கம். கீழே உள்ள பாடலைப் பாருங்கள்.


சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.