Tuesday, March 27, 2012

"திருமூலரின் தமிழ் மந்திரம்".


நம்முடைய பாரதத் திருநாடு எத்தனையோ மகான்களையும் சித்தர் பெருமக்களையும் பெற்று ஆசிர்வதிக்கப்பட்ட நாடு. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் அவர்களால் எத்தனையோ சித்து விளையாடல்கள் நடத்தப்பட்டு எண்ணற்ற பகதர்கள் பெரும்பயன் அடைந்திருக்கின்றனர். இன்றய தினம் நாம் காணும் ஒவ்வொரு கோயில்களும் அவர்களால் உருவாக்கப்பட்ட அவர்களால் முறைப்படுத்தப்பட்ட சக்தியின் இருப்பிடங்களாக விளங்குகின்றன. பெரும்பான்மையின அவர்களின் ஜீவ சமாதி அல்லது அவர்களின் ஜீவ சந்நித்தியம் பெற்ற இடங்களாக அறியப்படுகின்றன. உதாரணமாக பழனி போகர் பெருமானின் ஜீவ சமாதி, சிதம்பரம் திருமூலரின் ஜீவ சமாதி, சென்னிமலை பிண்ணாக்கு சித்தரின் ஜீவ சமாதி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதுமட்டுமில்லாமல் சித்தர்கள் ஒரே ஒரு இடத்திலோ அல்லது ஒரே ஒரு ஊரிலோ சமாதி அடைவதில்லை. ஒரே சித்தர் பல இடங்களில் சமாதி ஆனதாகவும் தெரிகிறது. மச்சமுனி திருப்பரங்குன்றத்தினிலும் திருவானைக்காவினிலும் சமாதி அடைந்துள்ளதாக குறிப்புகள் உள்ளன. அதேபோல காலாங்கிநாதர் சீனாவிலும்,காஞ்சிபுரத்திலும்,சேலம் அருகில் உள்ள கஞ்சமலையிலும் ஜீவசமாதியடைந்திருக்கிறார். யாக்கோபு முனி என்ற ராமதேவர் மெக்காவிலும் அழகர்மலையிலும் ஜீவசமாதியடைந்துவிட்டார். பாம்பாட்டி சித்தர் மருதமலை, துவாரகை, விருத்தாசலம்(பழமலை)யில் ஜீவ சமாதி யடைந்திருக்கிறார்.

பதினெட்டு சித்தர்கள் என்ற வழக்கு மிக பரவலாகக் காணப்பட்டாலும் சித்தர்கள் எண்ணிக்கை எண்ணிறந்ததாகவே உள்ள்ளது. தாயுமானவர் சித்தர்கள் தொகுப்பை சித்தர் கணம் என்று குறிக்கின்றார். திரேதாயுகத்தில் ஆயிரம்பேர், துவாபார யுகத்தில் ஐந்நூறு பேர், கலியுகத்தில் மூவாயிரம் பேர் சித்தர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சித்தர்கள் அனேகம் கோடி என்று சட்டமுனி குறிப்பிடுகின்றார்.

தமிழ்நாட்டில் இருந்து தமிழில் நூல்கள் யாத்த சித்தர்கள் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் மாத்திரம் அல்லர். பூனைக்கண்ணர் எகிப்த்தைச் சேர்ந்தவர் என்றும், போகர் மற்றும் புலிப்பாணி சீனர் என்றும், யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்றும் கருத்து நிலவுகிறது.



எனினும் சித்துஎனப்படும் இயற்கை மீறிய ஆற்றல் கைவரப் பெற்றவர்களாகச் சித்தர்கள் இருந்தனர் என்பதை அவர்களைப் பற்றிய செய்திகள் பலவும் வலியுறுத்துகின்றன. சித்துகள் பொதுவாக எண் வகைப்படும். அவற்றை அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசாத்துவம், வசித்துவம் என்று வடமொழியில் கூறுவர். இவற்றைத் தமிழில் முறையேஅணுவைப் போல் நுண்மையாதல்’, ‘மிகப் பெரியதாதல்’, ‘மிக நுண்மையாதல்’, ‘மிக எடையாதல்’, ‘எங்கும் செல்லும் ஆற்றல்’, ‘எண்ணியது எய்தும் ஆற்றல்’, ‘எதையும் ஆக்கும் ஆற்றல்’, ‘எவரையும் தன்வயப்படுத்தும் ஆற்றல்எனக் கூறலாம்.இராமலிங்க சுவாமிகள் கரும சித்தி, யோக சித்தி, ஞான சித்தி எனச் சித்துக்களை முப்பெரும் பிரிவுகளாக்கிக் கூறுகின்றார். மரபாகச் சொல்லப்படும் எண்வகைச் சித்திகளும், தேகத்தைக் கல்பசித்தி செய்தலும் கரும சித்தி எனப்படும்.



சித்தர்களில் ஒருவராகவும் நாயன்மார்களில் ஒருவராகவும் சித்தாந்த ஆசிரியர்களில் ஒருவராகவும் உள்ளவர் திருமூலர் ஒருவரே. சித்தர்களில் முதல்வராக அகத்தியரோடு வைத்து எண்ணப்படும் தலை சிறந்த சித்தரும் திருமூலரே. என்னுடைய பாட்டனார் என்று போகரால் வணங்கப்படுவரும் திருமூலரே. சைவ சித்தாந்தத்தை தமிழில் முதலில் சொன்னவரும் திருமூலரே. திருமூலர் கைலாயப் பரம்பரையைச் சேர்ந்தவர். சித்தர்களில் முதலாமவரும் முதன்மையானவருமான சிவபெருமானிடமும் நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். இவர் வேளாண்குலத்தில் புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரம் 3ஆம் மாதத்தில் கும்ப ராசியில் பிறந்தவர் என்று போகர் 7000 நூலில் கூறப்பட்டுள்ளது. திருமூலர் மாபெரும் தவயோகி. சிவயோகசித்தி எல்லாம் பெற்றவர். `நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்`. என்றும். ஒன்றே குலம் ஒருவனே தேவன்,” என்றும் அருளிய மகா ஞானி ஆவார். "என்னை நன்றாய் இறைவன் படைத்தான் தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே" என தண்ணார் தமிழால் ஞானத்தை உலகத்தார்க்கு வழங்கியருளிய வள்ளல். அதனால்தான் இவரை, ``நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்`என நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையிற் பரவிப் போற்றியுள்ளார். இவரது திருவாக்கில் மலர்ந்த தமிழ் மந்திர தந்திரம் தான் திருமந்திரம். இதனை 3000 பாடல்களாக 9 தந்திரமாக திருமூலர் மொழிந்துள்ளார் எனப்படுகிறது. இவற்றை 3000 ஆண்டு தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாட்டாகப் பாடினார். இவர் இராமாயண காலத்துக்கு முன்னர் சுந்தர நாதன் என்ற பெயருடன் முதல் தடவை தென்னாட்டுக்கு வந்து தில்லையில் பதஞ்சலி வியாக்கிரமர்களுடன் தனிக்கூத்து கண்டுள்ளார்.

இப்படி எல்லாவற்றிலும் தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றிய திருமூலரையும் அவர் இயற்றிய திருமந்திரத்தையும் தமிழ் மக்களுக்கு கொண்டு செல்லும் புதிய தொடர் தான் "திருமூலரின் தமிழ் மந்திரம்".

No comments: